ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

தேடலின் விடை - 1






தியானம் என்னும்போது பலரும் நினைப்பது கண்களை மூடி அமர்ந்து மூச்சை முறையாக்கி சிந்தனையை சீர் படுத்தி உலக தொடர்பறுத்து தன் உள்ளே பயணிப்பது என்று. நானும் அப்படித்தான் இருந்தேன். உண்மை உணரும்வரை. அதுமட்டுமல்ல தியானம் என்று உணர்த்தப்பட்டேன் என் குருமார்கள் கருணையினால். பௌர்ணமி அன்று விரதம் இருப்பது என் வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாகத்தான். இரவு சிவாலயம் சென்று அம்மையையும் அப்பனையும் கண்டு, வெளிவந்து முழுநிலவில் அம்மையையும் அப்பனையும் ஒரு சேர கண்டு வணங்கி பின் விரதம் முடிப்பேன். ஆடிப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்பதால் என் குருமார்கள் எல்லாவருக்கும் நன்றி கூற குரு பூஜை வைத்து விரதம் இருக்க இம்முறை நினைத்திருந்தேன். அன்று ஜூலை 22, 2013, ஆடி 6 திங்களன்று குரு பூஜைக்கான நாள். பூஜைக்காக தட்சிணாமூர்த்தி(குரு) படம் வைத்து இயற்கையால் படைக்கப்பட்டதை இறைவனாக வணங்கும் இயற்கைக்கே படைத்து பின் அதை பிரசாதமாக நாம் எடுத்துக்கொள்ளும் பல பழ வகைகள், பூக்கள் எல்லாம் வைத்து தயார் செய்திருந்தேன். விளக்கேற்றி வைத்துவிட்டு சிறிது நேரம் தியானித்தேன். தியானத்தில் இதுவரை நான் யார் யாரிடமெல்லாம் கற்றுக்கொண்டேனோ( கற்றுக்கொடுப்பவர்கள் எல்லாம் குருவாகிவிட முடியாது, நீங்கள் யாரிடம் கற்றுக் கொள்கிறீர்களோ அவரே குரு இதையும் எனக்கு போதித்தது ஓர் குரு தான்) அவர்களை எல்லாம் மனதார நினைத்து அனந்தகோடி நன்றிகளை அவர்கள் பாதங்களில் மானசீகமாக சமர்பித்தேன். இதுவரை எல்லாம் இயல்பாய் நடந்தது.
நன்றி நவில்தல் முடிந்து, மலர்களை கொண்டு அர்ச்சித்து ஆதி குருவாம் இறைவனுக்கு நன்றி கூறி மீண்டும் ஒரு ஆழமான தியானம் முடித்து, இறைவனை என்னுள் கலந்தவனை என் ஒவ்வோர் அணுவுள்ளும் இருந்து என்னை இயக்குபவனை நினைந்து என் மானசீக குருமார்கள் பாடல்களை துதித்து அவர்களின் ஓரோர் வார்த்தைகளின் இடையில் தொலைந்து மீண்டும் அடுத்த வார்த்தையில் மீண்டெழுந்து வந்தேன். ஔவயாரின் விநாயகர் அகவல் உணர்ந்து படித்தீர்களானால் அதில் உங்களை உணர்ந்து உள்ளொளி பெருக்கி முக்தியை வேண்டும் சூட்சமம் தெளியலாம். அகல்வலை உருகி உருகிப் பாடி ஓம்கார ரூபனாம் விநாயகனை மெய்ஞானம் வேண்டி வணங்கி
மகான் மாணிக்க வாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய சிவபெருமானின் அநாதி முறையான பழமை சிவபுராணத்தை துதிக்க தொடங்கினேன். கலந்து போ, கரைந்து போ, காணமல் போ இதுதான் எந்த ஒரு செயலிலும் லயித்துப் போவதற்க்கான வழிமுறை. அவரின் வரிகளில், வழங்கிய பொருளில் மெய் மறந்து ஆன்மநிலையில் சிவனை கண்டு என் சீவனால் பாடிக்கொண்டிருந்தேன். மேலே செல்ல செல்லச் என்னுள் ஏதோ ஒரு மாற்றம், நான் என் வயம் இழந்து இவ்வுலகை மறந்து, செயலே கர்மமாய் தொடர்ந்தேன். உடல் முழுவதும் ஒரு மாற்றம். அடிவயிற்றில் ஏதோ இருக்கிப்பிடிப்பதாய் ஓர் உணர்வு, நானே அறியாமல் என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் அது எந்த ஒரு உபாதையினலோ அல்லது உணர்வினாலோ வந்தது இல்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தேன் நான். மாணிக்கவாசகரின் வரிகளின் வழி என்னுள் நான் உணர்ந்த ஏக நாதனாம் ஏகம்பரரேஸ்வரரை தவிர வேறு ஏதும் என் சிந்தையில் இல்லை. தியானத்தில் எத்துனை அலாதி அமைதி கிடைக்குமோ அத்தனை அலாதியான பேரமைதியை எட்டி இருந்தது என் மனம். அத்தனை ஆனந்தம் அதில் ஆம் பேரானந்தம். பிறிதொரு நாளில் கேட்டுணர்ந்தேன் பிரார்த்தனை என்பது இயல்பானது, அது ஆன்மாவின் அழுகை, ஆன்மா தன் நன்றியை இயற்கையின் முன் சமர்பிக்கும் ஒரு அற்புதம் பிரார்த்தனை. ஆம் அன்று நான் உணர்ந்தது என் ஆன்மாவின் பிரார்த்தனை. நான் என்னும் பதம் கடந்து தேன் தமிழ் மொழியின் தீந்தமிழ் சொற்களில் கரைந்து எல்லாம்வல்ல இறையின் பாதம் பணிவதே லட்சியமாய், தேவைகளற்று எண்ணங்களற்று மனதும், உடலும், உணர்வும் ஒரே புள்ளியில் குவிந்து செயலைச் செய்கையில் நான் எனது ஆன்ம நிலையை உணர்ந்தேன். ஆன்மாவின் பிரார்த்தனையை உணர்ந்தேன். அந்த நிமிடங்கள், இப்படிதான் இருந்தது என்று நிச்சயத்து கூற முடியாத பேரானந்தம் என்னில் பரவுவதை உணர்ந்தேன். எந்த ஒரு செயலையும் நாம் நேர்மையாய் முழுமையாய் லயித்துச் செய்கையில் அந்த செயலின் உச்சத்தில் இறைவனை உணரலாம். இயல்பாய், சிந்தை ஒருமுகமாக நேர்மையாகச் செய்யும் எக்காரியமும் தியானத்திற்கு இணை, அது நிச்சயம் அமைதியை அளித்து பேரானந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதில் எனக்கு சந்தேம் இல்லை. 


குருவடி பணிதல் திருவடி சேர்க்கும்.
 


எல்லாம் நிறைவாகட்டும். சம்போ.

-          கௌதமன் ராஜகோபால்

புதன், 21 ஆகஸ்ட், 2013

தேடல் தொடங்கட்டும்!!

தேவா அண்ணாவின் தேடல் என்ற பதிவுக்கு பின்னூட்டமாக இடப்பட்டதை இங்கு பதிவாய் பதிகிறேன். காரணம் அந்த பதிவின் தாக்கத்தில் நீங்களும் அவரின் பதிவை வாசிக்க நேர்ந்தால் ஒரு நல்ல பதிவை உங்களிடம் சேர்த்ததற்காய் மகிழ்ச்சி கொள்வேன்.

தேவா அண்ணாவின் பதிவு : தேடல்   இங்கு க்ளிக்குங்கள்..

எல்லாம் கடந்து உள்ளிருப்பவன் கடவுள்.
எதற்குள் இருக்கிறான் என்ற ஆராய்ச்சி தொடங்கும்போது,
உன்னுள்ளிருந்து தொடங்கு.
இறைவன் விஸ்வரூபமானவன். ஆம் அவனை அளவிட முடியாது.
அவனால் படைக்கப்பட்ட ஓரோர் அணுவும் அவனால் இயங்குகிறது.
"அவனின்றி ஓரணுவும் அசையாது"

 
ஒரோரணுவும் ஒரு சிறு பிரபஞ்சம்.
அணுவின் அணுவாய் அதை இயக்குபவன் இறைவன்.


"சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே"

 
-ஆசான் திருமூலர்-


"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே"

 
-ஆசான் திருமூலர்-



 
இதை உணர தொடங்கும் நேரம் ஒவ்வொரு மனிதனும்
தன்னுள் கடந்து கட- வுள் உணர தொடங்கும் நேரம்
நீங்கள் தேடும் மனிதர்களையும் காண நேரிடலாம்.
மனித நேயம் மட்டுமல்ல, உயிர் நேயம் வேண்டும் இங்கு.
உடல்களின் எடையும் உருவ அமைப்பும் மாறலாம்,
உயிரின் எடை ஒன்றேன்றறிக.. பகவத் கீதை.
சமயம், புராணம், சம்பரதாயம், இன்னும் பிற வழிகள் அமைத்ததெல்லாம்
இவைகளை உணர்த்துவதர்க்கே, ஆனால் இங்கு நடப்பது வேறு.
புரிதலின் வேறுபாடு. உன்னை அறிந்துகொள், உண்மை புரிந்துகொள்.
கடவுளின் அடுத்து நிற்கும் உணர்வை பெறுவாய்.


வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஆடிப்பூரம்...

இன்று ஆடிப்பூரம் உலகனைத்தும் காக்கும் ஏக இறையின் இடப்புறம் தனதாக்கிய உலகன்னை அவதரித்ததாக கருதப்படும் நாள். ஆடி மாதம் என்றாலே அம்மன் அருள் மணக்கும் மாதம் என்பது உலகறிந்தது. இந்த மாதத்தின் எல்லா செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் அம்மன் ஆலயங்களில் மக்கள் ஒன்றிணைந்து கூட்டு பிரார்த்தனைகளை நடத்திடுவர். பெரும்பாலான அம்மனின் ஆலயங்களில் கூழ் பிரசாதமாக வழங்கப்படும். இவை அனைத்தும் நாம் அறிந்ததே. ஆடிப்பூரம் என்பதும் மிக விசேசமாக கொண்டாடப்படும் ஒரு விழா. இன்றைய தினம் அன்னைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து அந்த வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு வளைக்காப்பு இடுவதுபோல், உலகனைத்தும் ஈன்ற அன்னைக்கு வளையலிட்டு மகிழும் நாள். சரி இவையனைத்தும் ஆன்மீகம். நம்பிக்கை. ஆனால் இதில் நம் முன்னோர்கள் வைத்த மெய்ஞானம் காண வேண்டாமா.

 ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.

உத்தராயணக்காலம் என்பது தை மாத துவக்கத்தில் தொடங்குகிறது. மஹாசங்கராந்தியாக வழிபடுகிறோம் அதை. அப்போது தொடங்கும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் தை முதல் ஆனி மாதம்வரை கடந்து முழுமை பெரும். இந்த காலங்களில் பகல் பொழுது சற்று அதிகமாக இருக்கும். சூரியனின் வெம்மையும் அதிகமானதாக தோன்றும். ஏக இறையான மஹா தேவருக்கான அனைத்து மஹா உற்சவங்களும் இந்த சுற்றில் அமையபெற்றிருக்கும். மஹா சிவராத்திரி, குரு பௌர்ணமி உட்பட,


இந்த சுற்று முடிந்து தக்ஷிணாயன காலம் ஆடியில்  தொடங்குகிறது. இப்போது சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரத்தொடங்கும் பகல் குறைந்து இரவின் நீட்சி அதிகரிக்கும் காலம் இது. வெம்மை குறைந்து அன்னையின் கருணை குழுமை அதிகரிக்க தொடங்கும்.
இந்த காலகட்டத்தில் அன்னையை கொண்டாடும் நிகழ்வுகள் அதிகம் இருக்கும், ஆடி வெள்ளிகளில் அன்னையை கொண்டாட தொடங்கும் நாம் வரிசையாக அன்னைக்கான கொண்டாட்டங்களைக் காணலாம். நவராத்திரி உட்பட.

எந்த வருடமும் இவை இரண்டில் ஒன்றைத் தவிர்த்து முழுமை பெறாது. இரண்டுளும் இரண்டும் அடக்கம்,இந்த இரு கால மாற்றங்களைத்தான்,  அர்த்தநாரியாக வீற்று அனைத்தும் தன்னுள் அடக்கம் என்று உலகுணர்த்திய எகம்பரனை, உமையொரு பாகத்தானை உணர்த்தும் தத்துவமாக போதித்தனர் நம் முன்னோர்கள்.

இறையை மட்டும் போதிக்காமல் அந்த கால கட்டத்திற்க்கான உணவு முறைகளையும் பிரசாதம் என்ற பெயரில் உணர்த்திவிட்டு சென்றனர்.

இன்றைய தினம் பூமித்தாய் ஆண்டாளாக அவதரித்த தினமும் கூட. உலகைக் காக்கும் சயனனான மஹா விஷ்ணுவின் சங்கு சக்கரம் மற்ற பிற ஆயிதங்கள் மட்டும் ஆழ்வார்களாக அவதரித்த நிலையில், பூமித்தாய் ஆடி மாதம் வளர்பிறையில் பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு துளசி செடியின் அடியில் பூமித்தாய் விஷ்ணுவை சரணாகதி அடைய அவதரித்து பேயாழ்வார் கைகளில் தவழ்ந்தார்.

அவர் இறைவனுக்கு கட்டிய மாலைகளை தானே அணிந்து கண்ணாடியில் தன்னை காணும்போது, இறைவனையே தண்ணி கண்ணுள்ளார். தானும் இறையும் வேறல்ல இரண்டும் இரண்டினுள்ளும் அடக்கம். முயன்றால் இறைவனை மெய்யன்பால் அடையலாம் என்று உலகத்திற்கு உணர்த்திய "சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான" ஆண்டாள் இறைவனை அடைந்து வழி காட்டும்முன் வாழ்ந்தும் காட்ட அவதரித்த தினமும் இந்த ஆடிப் பூரம் தான்.

இந்த இனிய பொன்னாளில் எல்லாம் வல்ல இறைவனை துதித்து இறையருள் பெறுவோமாக.

இறையருள் பெருகட்டும். எல்லாம் நிறைவாகட்டும்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

இறைமை


















என்னுள்ளே என்னை புதைத்து
அதன் மீது ஏறி அமர்ந்து
நான் என்ற அகந்தை அழித்து
என் என்ற பதத்தை கிழித்து
திக்கெல்லாம் பறக்கவிட்டு
மனமென்னும் மாய வெளியில்
எழுந்திடும் எண்ணம் கொன்று
அகண்டதாம் ஆசையாழி
கடந்திடும் சூட்சமம் கண்டு
பரந்திருந்திருந்த இருவெளியதனில்
ஒளியாய் பரமனை கண்டேன்,
கிடைத்ததோர் கிடைப்பற்க்கரிய
பேரின்பம் பெற்றேனறிவாய்.
உலகினில் கிட்டுவதில்லை
சூன்யத்தில் நின்றான் அவனே.