புதன், 2 அக்டோபர், 2013

தேடலின் விடை – 2



ஞானாலய வள்ளலார் கோட்டம் ஏற்பாடு செய்திருந்த தியானம் ஒரு அறிமுகம், அரங்கத்தில் வெகுசிலரே இருந்தனர். தேடல் உள்ளவர்கள் அதிலும் சிலரே. அங்கு சென்றது இமய ஜோதி திரு ஞானானந்தா சுவாமிகளின் உரையைக் கேட்க. அத்தனை அன்பு அதில் ததும்பும். அத்தனை இன்பம் அதில் பெருகும். அத்தனையும் தேடலை இன்னும் தூண்டும்.
மதியம் உணவு இடைவேளை கடந்து எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார், பிறகு உகார, சிகார மற்றும் ஆஞ்ஞா இயக்கங்களை தியானத்தில் உணர்வதை விளக்கினார்.
அமைதியாக இருந்து பெறுவது மட்டுமல்ல தியானம், அது ஒரு இயல்பு, அதை யாருக்கும் யாரும் கற்றுக்கொடுக்க முடியாது, கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்பவன் ஏமாற்றுகிறான், ஏமாந்து விடாதீர்கள் அன்பர்களே. தன்னை தன்னிலமையில் அறிவதே தியானம். அறிந்துகொள்வோம் தியானத்தை அனுபவிப்போம்.
அமர்ந்து கொண்டு கண்களை மூடி, நாசியில் போகும் காற்றை இடகலை பிங்கலை சுழிமுனை என்று கவனிப்பது மட்டுமல்ல தியானத்தின் துவக்கம். இசையும் நடனமும் கூட தியானம்தான்.
ஆம் சிவனின் தாண்டவங்களை பற்றி நிறைய வாசித்தும், பார்த்தும் இருக்கும் நமக்கு நடனம் என்பது மனித இயல்பு என்பது கடுகளவேனும் நினைவிருப்பின் ஆடுவதற்கு நாம் தயங்க மாட்டோம்.
சுவாமிகள் தொடர்ந்தார், இனி நாம் சற்று நேரம் இயல்பாய் இருப்போம். அனைவரும் அவரவர் இடங்களில் சற்று இடைவெளி விட்டு நின்று கொள்ளுங்கள், கண்கள் மூடி இருக்கட்டும், புற உலகை மறந்தால் மட்டுமே மனிதன் அவனின் அகத்துள் பயணிக்க முடியும். இசை ஒன்று ஒலிபரப்பப்படும், அதில் வரும் இசைக்கு தகுந்தாற்போல் முதலில் சற்றே அசைந்து கொடுங்கள் அது மட்டும் போதும் மற்றவை தானாய் நடக்கும் என்றார்.
கூச்ச நாச்சங்களை வெளியே எறிந்துவிட்டு உன்னுள் ஏற்படும் அதிர்வுகளை மட்டும் கவனித்து அது உன்னை இயக்க அனுமதி.
இசை பரவத் தொடங்கியது, மெலிதாய் மிக அழகாய் மெல்லிய அதிர்வுகளுடன் துவங்கியது, மெல்ல அசைந்து கொடுத்து உள்ளுக்குள் தோன்றும் அதிர்வுகளை உன்னிப்பாய் கவனிக்க அது மெது மெதுவாய் இசையுடன் கலந்து என்னையும் அதனுள் இணைத்து அசைக்கத் தொடங்கியது. இசையோடு கலந்து கலந்து அதில் கரைந்து கரைந்து அந்த இசையாய் மாறித்தான் போனேன். 


அவனின்றி ஓரணுவும் அசையாது, ஆதி இறைவன் சிதைவடிவில் இருந்து மட்டும் அருள் பாலிப்பது இல்லை, அது நாம் ஏற்றுக்கொண்ட முறையாயினும் ஆதியாய் வந்தவன் ஆதியற்று வந்தவன் அநாதியாய் நின்றவன் அகண்டமாய் நின்றவன் இங்கங்கு எனாதபடி எங்கும் நிறைந்தவன் அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் நின்றவன் என் அணுக்கள் எங்கும் நிறைந்திருக்கிறான் என்றால் அது மிகையாகது.
இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் அவனின் நடனம், ஆம் அணுக்களை இயக்க அதனுள் இயக்கமாய் இருக்கும் ஆதிமூலம் அவன், அவன் ஆட ஆட அணுக்கள் அதிர, அதிர்வுகள் தொடர பிரபஞ்சம் இயங்குவதை எவர் மறுக்க முடியும். 

அப்படி எங்கும் நிறைந்த இறை என்னுள்ளும் இருக்கிறன், அந்த இசையில் முழுமையாய் நான் கலந்த வேளை, என்னை நான் மறந்து, நான் என்ற பதம் மறந்து உடல் மறந்து அந்த இசையாய் நான் மாறிய வேளை இறைவன் என்னுள் ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினான்.
அவனின் ஆடலில் மெய்யும் சேர்ந்தாடியது, இசையின் வேகம் கூட கூட, அதிர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அவனின் ஆட்டமும் அதிகரித்தது. பேரானந்தப் பெருவெளியில் மிதந்தேன் நான். இசை உச்சத்தை தொட்ட நேரம் புராணங்களில் கூறப்பட்டதைப் போல் நாதனின் தாண்டவங்களை ஒத்த ஒரு அதிர்வை உணர்ந்தேன். 

எல்லாம் முடிந்து இசை நிறுத்தப்பட்ட வேலையில் நாங்கள் அப்படியே இருக்கும் இடங்களில் கண்களை திறக்கமம் அமர அறிவுறுத்தப்பட்டோம். அப்படியே நாம் முன்னுணர்ந்த தியான நிலையை இப்போது தொடரச்சொன்னார், அமைதியாய் நாசியில் ஓடும் காற்றை கருத்தில் நிறுத்தி உடலில் உள்ள அதிர்வுகளை உணர சொன்னார். நிச்சயம் இது ஒரு அலாதியான முறைதான்.
எப்பொழுதும் எழிமையாய் செய்யும் தியான முறையுடன் நடனமும் கூட அது இன்னும் அலாதியான பேரின்பத்தை, நிலைத்தன்மையை நம்முள் விதைக்கிறது. உடலும் மனமும் மிக மிக தளர்வாய், அதிகமான அதிர்வுகளை உணர முடிந்தது என்னில்.
இறைவனின் இருப்பை ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தேன் நான். பின் நிதானமாக சற்று நேரம் படுத்துக்கொள்ள அனைத்து அணுவும் இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை இன்பம் அதில்.. 

நிச்சயம் நடனம் ஒரு தியானம்தான். அதைத்தான் நம் முன்னோர்கள் ஈசனின் தாண்டவங்களாய் நமக்கு போதித்து சென்றுள்ளனர். எல்லா மனநிலைக்கும் ஏற்றது நடனம். ஆனால் அது எல்லா இடத்திலும் சாத்தியமில்லை என்பது உண்மை.
இதை அனுபவித்து வெகு சில நாட்களில் ஓஷோவின் குண்டலினி தியான முறை பற்றி அறிந்து கொண்டது இன்னும் பயனளித்தது.
அதை அவர் நான்கு நிலைகளாய் விளக்குகிறார்.
இது ஒருமணி நேரம் செய்யக்கூடியது. நமது அறைக்குள் நல்ல இட வசதி உள்ளது போல். காரணம் நீங்கள் இசையோடு ஒன்றும் போது தடை ஏதும் இருக்க வேண்டாம்.

முதல் நிலை: முதல் பதினைந்து நிமிடம் நின்று கொண்டு உங்கள் உடல் முழுவதும் அதிர்வுகள் பரவ அனுமதியுங்கள், உடலின் எல்லா பகுதிகளையும் நன்கு குழுங்கும்படி அசைவுகள் கொடுங்கள். உதறுங்கள், குழுங்குங்கள்.

இரண்டாம் நிலை : இரண்டாம் பதினைந்து நிமிடம் அடுத்த இசையோடு சேர்ந்து ஆடுங்கள், இயல்பாய் எப்படி எல்லாம் ஆடத் தோன்றுகிறதோ, அப்படி எல்லாம், எல்லாம் இடத்திற்கும் நகர உங்களை நீங்கள் அனுமதியுங்கள், உங்களுக்கும் இசையை செலுத்தி உங்கள் அணுக்கள் அதற்க்கு ஆட அதை அப்படியே உடல்வழி வெளிப்படுத்துங்கள். 


மூன்றாம் நிலை : மூன்றாம் பதினைந்து நிமிடங்கள் அமைதியாய் அமர்ந்து உள்ளும் புறமும் உங்களுக்குள் ஏற்படும் அதிர்வுகளை அப்படியே அனுபவியுங்கள், சாட்சியாய் மட்டுமே இருங்கள், வேறேதும் செய்ய வேண்டாம்.  அதை உணர்ந்தனுவிக்கும் போது நிச்சயம் ஒரு மாற்றத்தை உணர முடியும்.
நான்காம் நிலை : இறுதி பதினைந்து நிமிடங்கள் அப்படியே தரையில் கை, கால் மற்றும் உடலை தளர்வாய் விட்டு அசைவற்று படுக்கவும். எந்த எண்ணமும் வேண்டாம். இசையில் மட்டும் நாட்டத்தை செலுத்துங்கள். உங்கள் உடலை இசையாய் மாற்றுங்கள். கலந்து கரைந்து போங்கள். இதில் கிடைக்கும் அனுபவம் என்ன என்பது உணர்ந்தனுபவிக்கும் போது தான் புரியும்..
அனைத்து நிலைகளுக்குமான இசையை நீங்களே  தேர்ந்தெடுக்கலாம் தியானத்திற்கு ஏற்றார்போல், அல்லது  அவற்றிற்கான மாதிரிகளை நீங்கள் இந்த முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் www.oshoosho.com  .

இறையை தன்னுள் உணர நிச்சயம் நாம் இயல்பில் இருத்தலில் மட்டுமே முடியும்.
இயல்பில் இருப்போம், இறைவனை உணர்வோம்.
எல்லாம் நிறைவாகட்டும்.
சம்போ மகாதேவா..

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வாழ்க்கை ஒரு தொடர் (கல்வி) தேடல்.

இன்றைய தினம் நான் வாழ்த்த நினைத்தவர்களை எல்லாம் இல்லை வாழ்த்த வயதில்லை மானசீகமாக வணங்க நினைத்தவர்களை மானசீகமாக காலையிலேயே வணங்கிவிட்டாலும், எழுத நினைத்ததை எழுதாமல் உறங்க முடியாது போலும்.. இன்று கல்லூரியில் சற்று வழக்கத்துக்கு மாறாக பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடக்கும் ஒவ்வொரு மாணவ மனைவியின் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பெற்று நன்றிகளை சொல்லி நகர்கையில், ஏதோ ஒன்று மனதின் ஓரத்தில் உறுத்தத்தான் செய்தது. இவர்களுக்கு எதை நான் கற்றுக்கொடுத்து விட்டேன். வாழ்வியலின் அடிப்படையேனும்?? கணிப்பொறியின் பரிணாம வளர்ச்சியும், பயன்பாடும், மென்பொருள் எழுதும் மொழிகளின் பரிட்சயமும் இவர்களை மனிதர்களாக, வாழ்க்கையை புரிந்தவர்களாக ஆக்கி விடுமா என்ன?? நிச்சயம் இல்லை. சற்றே பின் நோக்கி நகர்ந்து என் வாழ்விலும் நான் மாணவனை இருந்த போது என் ஆசிரியர்கள் எனக்கு எதை எப்படி கற்றுத் தந்தார்கள் என்று பார்த்தல், பெரும்பாலானவர்கள் அதையே தான்  செய்திருக்கிறார்கள்.
 
 எத்தனை ஆசிரியர்களை நாம் நினைவில் கொண்டிருக்கிறோம்.. ஆண்டுகள் கடந்த பின்னும் எவரேனும் நம் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார் எனில் நிச்சயம் அவர்கள் பாட புத்தகங்களைத் தாண்டி வாழ்க்கைக்கான புரிதலையும் வழி காட்டுதலையும் சர்வ நிச்சயமாக போதித்திருக்க வேண்டும். அப்பட்டமான உண்மை. எனக்கு படித்த பாடங்களை நினைவிருக்கும் அளவிற்கு, அதை சொல்லித்தந்த பலர் அத்தனை தெளிவாய் என் மனதில் இல்லாமல் போனதற்கு அதுவும் காரணமாய்  இருக்கலாம்.

வாழ்க்கையில் அதை செயலாக்கும்வரை  எந்த ஒரு கல்வியும் முழுமை அடைவதில்லை.

நிதர்சனமான உண்மை, இங்கு போதிக்கப்படும் பாடங்கள் பல வெறும் பாடங்களாகவே இருக்கின்றன, பலதை நாம் உபயோகிப்பதே இல்லை அல்லது அதை வாழ்வில் எப்படி உபயோகிப்பது அல்லது அதன் பயன் என்ன என்பது போதிக்கப்  படுவதில்லை.

கல்வி வெறும் கற்றுத் தேர்வதர்க்கான கட்டமைப்பாக்கப் பட்டதாய் உணர்கிறேன். தேர்வு நிலை தாண்டி அதைப்  பற்றி யாரும் சிந்திப்பது இல்லை.

கற்றுக் கொடுப்பவர்கள் எல்லாம் ஆசிரியர் ஆகிவிடுவதில்லை, நாம் யாரிடம் கற்றுக்கொண்டு அதை வாழ்வில் புகுத்தி உணர்கிறோமோ அவரே நம் ஆசிரியர் ஆகிறார்.

இப்படி எனக்கு அமைந்த சில குருமார்களை இங்கு நிச்சயம் நான் வாழ்த்தி வணங்கியே ஆகவேண்டும்.

எனது தொடக்கப் பள்ளி வாழ்வில், நிச்சயத்து கூற முடியும் நான் வெகு சுமாரான மாணவனாகவே இருந்தேன், அதிலும் தமிழில் என்னை போல் எழுத்துப் பிழை செய்ய யாராலும் முடியாது.

என் ஆசிரியர்களை விட அதிகமாக எனக்கு கற்றுக்கொடுத்தவர் என் அன்னை.

கணிதத்தை எனக்கு நாட்டம் வர என்னை ஊக்கப்படுத்தி போதித்தவர் என் தந்தை.

நடுநிலைப் பள்ளியில் எனக்கு ஆர்வமும், அதே சமயத்தில் துடிப்புடன் எதையும் எதிர்கொண்டு வெல்ல என்னைத் தூண்டியவர்கள், தாமோதிரன் அய்யா, சுதந்திரமணி அம்மா இவர்கள் இருவரையும் வாழ்வுள்ள வரை மறக்க இயலாது. அன்பினால் எதையும் சாதிக்க இயலும் என்று உணர்த்தி, பாடத்துடன் வாழ்விற்கான பால பாடத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுத்தவர்கள் இவர்கள்தான்.

பின் பத்மாவதி அம்மா, எங்கள் விளையாட்டு ஆசிரியர். நான் வெற்றி பெருகிறேனோ இல்லையோ, அணியை வழி நடத்த, துவண்டு போகும் அணியினருக்கு ஊக்கமளிக்க, தோல்வியின் விழும்பிலும் துவளாமல் நின்று எதிராளியை மிரள வைக்க, தோற்றாலும் அதிலும் வெற்றிக்கான படிகளை கற்றுக்கொள்ள சொல்லிக்கொடுத்தவர். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல வாழ்வில் துவளும் ஒவ்வொரு நொடியுலும் எவ்வளவு உதவும் என்று பின்னாளில் அனுபவம் கற்றுக்கொடுத்தது வேறு கதை.

மேல்நிலை பள்ளிக்காலத்தில் நானே அறியாமல், பள்ளியின் அத்துனை ஆசிரியர்களும் என்மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். பள்ளியின் மாணவர் தலைமை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ தலைமை, இன்னும் எல்லாவற்றிலும் என் பங்களிப்பு இவை எனக்கு கற்றுக் கொடுத்தவைகள் ஏராளம். அங்கு நான் கற்றுக்கொண்டது வாழ்வின் பல இடங்களில் இன்றும் உதவாமல் இல்லை.
என்னை முன்னிலைப் படுத்த படுத்த எனக்கான பங்களிப்பு என்ன, எப்படி அதை அணுக வேண்டும், தலைமை ஏற்றால் தலைக்கணம் வந்து விடக்  கூடாது,  சக மனிதர்களோடு இணைந்து இயங்க வேண்டும். இன்னும் எத்தனையோ பாடங்கள். இதில் பல விசங்களில் எனக்கு முன்னோடியாக இருந்து இன்றும் தொடர்ந்து என்மீது என்பை சொரிந்து வரும் என் பள்ளி கால மூத்த மாணவர் Adalarasu Anbalagan அண்ணாவை இந்நாளில் நினையாமல் இருக்க முடியாது.

கல்லூரி என் வாழ்வை திசை மாற்றிய காலங்கள், எனக்கு பள்ளி தந்த அனுபவம் எவருடனும் எளிதில் பழகுதல், அன்பை பரிமாறுதல் அரசு பள்ளி எனக்களித்த வரம் அது. இருப்பினும் ஆங்கிலம் என்னும்போது ஒரு அரசு பள்ளி அதிலும் தமிழ் வழி கல்வி கற்ற சாதாரண மாணவனை விட பின் தங்கியே இருந்தேன். எனக்கு ஆர்வம் ஊட்டி முதலாம் ஆண்டுடன் ஆங்கிலம் மொழிப்பாடமாக இல்லை என்றாலும் எங்களை ஆங்கிலத் துறையோடு தொடர்ந்து இணைந்திருக்கச் செய்து, அம்மொழியில் திறம் பெறச் செய்த ஆசிரியை Narmadha Ram. மொழியை மட்டுமல்லாது வாழ்வியலையும், பண்பையும், நேர்மையையும் போதித்தவர் இவர்.

கணிப்பொறி அறிவியலை பள்ளியிலிருந்து படித்தாலும், அதில் ஆர்வத்தை ஏற்படுத்தி கற்க கற்க இன்னும் வேண்டும் என்று தேடி ஓடவிடும் மனோநிலையை தந்து, எங்களுக்கு குருவாய் மட்டுமல்லாது நண்பனாய் இருந்து நாங்கள் செய்யும் தவறுகளை பகிரங்க படுத்தாமல் ஒரு தாயன்போடு வழி நடத்திய எங்கள் இளங்கலை துறைத்தலைவர் திரு. Navaneetham Periyasamy அவர்கள் படத்தோடு நின்றுவிடவில்லை. சரியான நேரங்களில் சரியான பாதையை காட்டி, எங்களை வழி நடத்தியவரும் கூட. என்றும் தன்னான் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்து சீர் தூக்கி விடும் மனோ நிலையை கற்றுத் தந்தவர்.

முதுகலையில் சேரும்வரை சராசரி மாணவனாய் இருந்த என்னை, கல்லூரியில் எனது பாடத்திட்டத்தில் முதல் மாணவனை வர என்னை தேற்றியவர்கள் அநேகம் பேர். யாமினி மேம் துறைத் தலைவர், Chitra Ganesan, கீதா மேம், சாமு மேம் இவர்கள் என்னை மாணவனாய் நடத்தியதை விட தம்பி என்று அழைத்த நாட்கள் அதிகம்.


கல்லூரி நாட்களிலும், பின்னாளிலும் என்னை நான் உணர வாழ்வை புரிந்துகொள்ள, இன்றும் என்னை வழிநடத்தும் சிலரை என்ன்னால் சொல்லாமல் இருக்க முடியாது.
காரணம் பாட புத்தகங்களை விட வெளியேதான் வாழ்க்கைக்கான பாடம் விரிந்து கிடக்கிறது என்று வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் உணர்த்தப்பட்டிருக்கிறேன் நான், எனது ஆசிரியர்களாலும், இவர்கள் போல் உள்ள  நண்பர்களாலும். SatheeshBabu Thiruvengadam, Sujith Jayaprakash, Kathir Sujith, Dhanabal Subramanium.

உண்மையான ஆன்மீகம் எதுவென்று எனக்கு உணர்த்தி, அதை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி அதன் உட்கருத்தை உணர்த்தி, வாழ்வதில்தான் வாழ்க்கைக்கான அனைத்து அர்த்தங்களும் புதைந்து கிடக்கிறது என்ற தத்துவம் உணர்த்தி, என்னை மெய் ஞானம் தேடி நடை பயிற்றுவித்த என் குருமார்கள் Madhusudhanan Podhuval, Dheva Subbaiah,நாராயணசாமி (Teacher @ Vazhum kalai mandram), ஞானானந்தா சுவாமிகள், ஞானானந்த வள்ளலார் கோட்டம்.

இன்னும் எத்தனையோ பேர் தினம் தினம் புது புது அர்த்தங்களை வாழ்விற்கு வழங்கி அதன் மூலம் வாழ்விற்கான சூட்சமங்களை தேடி செல்ல வழி அமைத்து தரும், எனக்கு வாழ்வியலை கற்றுத் தரும், வாழ்வை வளமானதொரு மனோநிலையில் வாழ கற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு குருவிற்கும் இதை காணிக்கையாக்குகிறேன்.

அவனின்றி ஓரணுவும் அசையாது.

எங்கும் நிறைந்து எல்லையற்றவனாய் இருந்தும்  ஏதுமற்றது போல் சலனமற்று, நிசப்தமாய் ஒவ்வொருவர் வாழ்விற்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கும்,ஏதோ ஒரு வகையில் நம்மை இணைத்து நம் வாழ்வினிர்க்கு அர்த்தமாகிப் போன எல்லாம் வல்ல இறையை. ஆதி குருவாம் சற்குருநாதனின் திருவடிகள் போற்றி.

எல்லாம் நிறைவாகட்டும்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

தேடலின் விடை - 1






தியானம் என்னும்போது பலரும் நினைப்பது கண்களை மூடி அமர்ந்து மூச்சை முறையாக்கி சிந்தனையை சீர் படுத்தி உலக தொடர்பறுத்து தன் உள்ளே பயணிப்பது என்று. நானும் அப்படித்தான் இருந்தேன். உண்மை உணரும்வரை. அதுமட்டுமல்ல தியானம் என்று உணர்த்தப்பட்டேன் என் குருமார்கள் கருணையினால். பௌர்ணமி அன்று விரதம் இருப்பது என் வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாகத்தான். இரவு சிவாலயம் சென்று அம்மையையும் அப்பனையும் கண்டு, வெளிவந்து முழுநிலவில் அம்மையையும் அப்பனையும் ஒரு சேர கண்டு வணங்கி பின் விரதம் முடிப்பேன். ஆடிப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்பதால் என் குருமார்கள் எல்லாவருக்கும் நன்றி கூற குரு பூஜை வைத்து விரதம் இருக்க இம்முறை நினைத்திருந்தேன். அன்று ஜூலை 22, 2013, ஆடி 6 திங்களன்று குரு பூஜைக்கான நாள். பூஜைக்காக தட்சிணாமூர்த்தி(குரு) படம் வைத்து இயற்கையால் படைக்கப்பட்டதை இறைவனாக வணங்கும் இயற்கைக்கே படைத்து பின் அதை பிரசாதமாக நாம் எடுத்துக்கொள்ளும் பல பழ வகைகள், பூக்கள் எல்லாம் வைத்து தயார் செய்திருந்தேன். விளக்கேற்றி வைத்துவிட்டு சிறிது நேரம் தியானித்தேன். தியானத்தில் இதுவரை நான் யார் யாரிடமெல்லாம் கற்றுக்கொண்டேனோ( கற்றுக்கொடுப்பவர்கள் எல்லாம் குருவாகிவிட முடியாது, நீங்கள் யாரிடம் கற்றுக் கொள்கிறீர்களோ அவரே குரு இதையும் எனக்கு போதித்தது ஓர் குரு தான்) அவர்களை எல்லாம் மனதார நினைத்து அனந்தகோடி நன்றிகளை அவர்கள் பாதங்களில் மானசீகமாக சமர்பித்தேன். இதுவரை எல்லாம் இயல்பாய் நடந்தது.
நன்றி நவில்தல் முடிந்து, மலர்களை கொண்டு அர்ச்சித்து ஆதி குருவாம் இறைவனுக்கு நன்றி கூறி மீண்டும் ஒரு ஆழமான தியானம் முடித்து, இறைவனை என்னுள் கலந்தவனை என் ஒவ்வோர் அணுவுள்ளும் இருந்து என்னை இயக்குபவனை நினைந்து என் மானசீக குருமார்கள் பாடல்களை துதித்து அவர்களின் ஓரோர் வார்த்தைகளின் இடையில் தொலைந்து மீண்டும் அடுத்த வார்த்தையில் மீண்டெழுந்து வந்தேன். ஔவயாரின் விநாயகர் அகவல் உணர்ந்து படித்தீர்களானால் அதில் உங்களை உணர்ந்து உள்ளொளி பெருக்கி முக்தியை வேண்டும் சூட்சமம் தெளியலாம். அகல்வலை உருகி உருகிப் பாடி ஓம்கார ரூபனாம் விநாயகனை மெய்ஞானம் வேண்டி வணங்கி
மகான் மாணிக்க வாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய சிவபெருமானின் அநாதி முறையான பழமை சிவபுராணத்தை துதிக்க தொடங்கினேன். கலந்து போ, கரைந்து போ, காணமல் போ இதுதான் எந்த ஒரு செயலிலும் லயித்துப் போவதற்க்கான வழிமுறை. அவரின் வரிகளில், வழங்கிய பொருளில் மெய் மறந்து ஆன்மநிலையில் சிவனை கண்டு என் சீவனால் பாடிக்கொண்டிருந்தேன். மேலே செல்ல செல்லச் என்னுள் ஏதோ ஒரு மாற்றம், நான் என் வயம் இழந்து இவ்வுலகை மறந்து, செயலே கர்மமாய் தொடர்ந்தேன். உடல் முழுவதும் ஒரு மாற்றம். அடிவயிற்றில் ஏதோ இருக்கிப்பிடிப்பதாய் ஓர் உணர்வு, நானே அறியாமல் என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் அது எந்த ஒரு உபாதையினலோ அல்லது உணர்வினாலோ வந்தது இல்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தேன் நான். மாணிக்கவாசகரின் வரிகளின் வழி என்னுள் நான் உணர்ந்த ஏக நாதனாம் ஏகம்பரரேஸ்வரரை தவிர வேறு ஏதும் என் சிந்தையில் இல்லை. தியானத்தில் எத்துனை அலாதி அமைதி கிடைக்குமோ அத்தனை அலாதியான பேரமைதியை எட்டி இருந்தது என் மனம். அத்தனை ஆனந்தம் அதில் ஆம் பேரானந்தம். பிறிதொரு நாளில் கேட்டுணர்ந்தேன் பிரார்த்தனை என்பது இயல்பானது, அது ஆன்மாவின் அழுகை, ஆன்மா தன் நன்றியை இயற்கையின் முன் சமர்பிக்கும் ஒரு அற்புதம் பிரார்த்தனை. ஆம் அன்று நான் உணர்ந்தது என் ஆன்மாவின் பிரார்த்தனை. நான் என்னும் பதம் கடந்து தேன் தமிழ் மொழியின் தீந்தமிழ் சொற்களில் கரைந்து எல்லாம்வல்ல இறையின் பாதம் பணிவதே லட்சியமாய், தேவைகளற்று எண்ணங்களற்று மனதும், உடலும், உணர்வும் ஒரே புள்ளியில் குவிந்து செயலைச் செய்கையில் நான் எனது ஆன்ம நிலையை உணர்ந்தேன். ஆன்மாவின் பிரார்த்தனையை உணர்ந்தேன். அந்த நிமிடங்கள், இப்படிதான் இருந்தது என்று நிச்சயத்து கூற முடியாத பேரானந்தம் என்னில் பரவுவதை உணர்ந்தேன். எந்த ஒரு செயலையும் நாம் நேர்மையாய் முழுமையாய் லயித்துச் செய்கையில் அந்த செயலின் உச்சத்தில் இறைவனை உணரலாம். இயல்பாய், சிந்தை ஒருமுகமாக நேர்மையாகச் செய்யும் எக்காரியமும் தியானத்திற்கு இணை, அது நிச்சயம் அமைதியை அளித்து பேரானந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதில் எனக்கு சந்தேம் இல்லை. 


குருவடி பணிதல் திருவடி சேர்க்கும்.
 


எல்லாம் நிறைவாகட்டும். சம்போ.

-          கௌதமன் ராஜகோபால்